My Blog List

Monday, February 11, 2013

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்




தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
 பி. சுந்தரய்யா தமிழில்: என். ராமகிருஷ்ணன்
 இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் முளைத்தெழுந்த நாளில் இருந்து, அது நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. ஆந்திர மாநிலத்தில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் இது. நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று  மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. சர்வோதயா இயக்கத் தலைவர் வினோபா பாவே, 'பூதான' இயக்கத்தை முன்னெடுத்தது இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான். மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசை நெருக்கியதில் இதற்கு ஒரு பெரும் பங்குண்டு. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்கள¤ன் விளைவாகவே தேசிய அரசியல் வானில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம்  ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. இத்தகைய ஒரு மகத்தான போராட்டத்தை வழி நடத்தியவர்களுள் ஒருவரான தோழர் பி. சுந்தரய்யா, தனது நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய 600 பக்க ஆவணத்தின் சுருக்கமே  இந்நூல். இது 'சோஷியல் சயன்டிஸ்ட்' இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றது. 65க்கு மேற்பட்ட இடதுசாரி இயக்கம் சார்ந்த நூல்களை எழுதிய என். ராமகிருஷ்ணன் இதைத் தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

No comments:

Post a Comment