My Blog List

Monday, February 11, 2013

அம்பேத்கரின் இன்றைய தேவை


அம்பேத்கரின் இன்றைய தேவை
ஜி. இராமகிருஷ்ணன்
'முக்கியமான தொழிற்சாலைகளும், பணிகளும் அரசுடைமையானவையாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொழில் பொதுத்துறையில் இருக்க வேண்டும். தனியார் துறையும், தொழிற்சாலைகளும் பொருளாதாரத்தில் ஒரு பங்கு வகிக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. நிலம் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். விவசாயத்தில் கூட்டுறவுப் பண்ணைத் திட்டத்தை அறிமுகம் செய்து சிறு விவசாயிகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் வலியுறுத்திய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஜி. இராமகிருஷ்ணன் நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலை அதன் அனைத்து வடிவங்களிலும் தலையிட்டு அவற்றை அம்பலப்படுத்துகிற உரை இது. இந்துவாகப் பிறந்திருந்த போதிலும், சாதீய மனுதர்மப் பாகுபாடுகளின் உறைவிடமாகியிருக்கும் அந்த இந்துமதத்தைத் துறந்து பௌத்தம் தழுவியவர் டாக்டர் அம்பேத்கர். சிறிய  கையடக்க வடிவில் செறிவான சிந்தனைத் தொகுப்பு.

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்




தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
 பி. சுந்தரய்யா தமிழில்: என். ராமகிருஷ்ணன்
 இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் முளைத்தெழுந்த நாளில் இருந்து, அது நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. ஆந்திர மாநிலத்தில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் இது. நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று  மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. சர்வோதயா இயக்கத் தலைவர் வினோபா பாவே, 'பூதான' இயக்கத்தை முன்னெடுத்தது இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான். மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசை நெருக்கியதில் இதற்கு ஒரு பெரும் பங்குண்டு. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்கள¤ன் விளைவாகவே தேசிய அரசியல் வானில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம்  ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. இத்தகைய ஒரு மகத்தான போராட்டத்தை வழி நடத்தியவர்களுள் ஒருவரான தோழர் பி. சுந்தரய்யா, தனது நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய 600 பக்க ஆவணத்தின் சுருக்கமே  இந்நூல். இது 'சோஷியல் சயன்டிஸ்ட்' இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றது. 65க்கு மேற்பட்ட இடதுசாரி இயக்கம் சார்ந்த நூல்களை எழுதிய என். ராமகிருஷ்ணன் இதைத் தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

காவிரி \ பிரச்சனையின் வேர்கள் வெ. ஜீவகுமார்
 காவிரி நடுவர் மன்றம், தன் இறுதி உத்தரவை 2007ம் ஆண்டே வழங்கிவிட்டது. இன்று வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. சம்மந்தப்பட்ட மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றன. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் செய்த பிறகும் மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லை. கர்நாடகமும் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் தகராறு செய்யத் தொடங்கிவிட்டது. Ôமச்சு மச்சா நெல் விளையும், மகுடஞ் சம்பா போரேறும், குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ் சம்பா போரேறும்Õ என்று காவிரியின் மகசூலை பழைய நாட்டுப்பாடல் குறிக்கிறது. பேச்சுவார்த்தை, நிர்வாக நடவடிக்கைகள், சட்டபூர்வமான முயற்சிகள் என தமிழ்நாடு மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் மிக ஆதாரபூர்வமான சான்றுகளுடன் பதிவு செய்திருக்கிறார் ஜீவகுமார். உணர்ச்சிவயப்பட்ட, ஆத்திரமூட்டும் சொற்கள் இல்லை. மிகவும் நிதானமான பொறுப்புமிக்க குரல் ஒலிக்கும் ஆவணம் இது. காவேரி நடக்கவும், ஓடவும், வாழவும் வேண்டும். அப்போதுதான் 2 கோடி மக்களின் சாகுபடிப் பிரச்சனை, 5 கோடிப் பேரின் குடிநீர்த் தேவை, 12 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதார அடிப்படை இவையாவும் தீரும் என்று உணர்த்துகிற ஆவணம்.

அரசும் - புரட்சியும்




அரசும் - புரட்சியும்
லெனின் தமிழில்: ரா. கிருஷ்ணய்யா
லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர  உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? 'வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு' என்கிறார்  லெனின். 'சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது' என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர். ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது. புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும்' பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள்.  இந்த இலட்சிய ஈடேற்றத்தின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். 'உலர்ந்து, உதிர வேண்டியதுதான்' என்கிறார் லெனின். அது எப்படி ஏன்? இதைத்தான் இந்த நூல் முழுவதிலும் லெனின் விவாதித்திருக்கிறார்.
 தேர்ந்த மொழழி பெயர்ப்பாளர் அமரர் ரா. கிருஷ்ணய்யாவின் நடை நெருடல் இல்லாதது

. மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு




 மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு
மாரிஸ் கார்ன்ஃ போர்த்  தமிழில்: திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி.
 சமகாலச் சூழலில், மார்க்சியம் எதிர்கொள்வது போன்ற நெருக்கடிகளை வேறு எந்த ஓர் அரசியல் தத்துவமாவது எந்தச் சூழலிலாவது எதிர்கொண்டிருக்குமா? எதிரிகளால் கூட அல்ல, 'நண்பர்கள் போன்று நடிப்பவர்களாலும்', உள்ளிருந்தே உலைவைக்கிற உலுத்தர்களாலும்தான் இன்று பெரும் இடையூறுகள் வருகின்றன. எனினும், மார்க்சியம் காலாவதியாகி விடவில்லை. மாறாக, இன்று உலகெங்கும் மறுவாசிப்புக்கு மார்க்சிய நூல்களைத் தேடியலைகிற தேடல்தான் அதிகரித்துள்ளது. இச்சூழலில், மார்க்சிய மூலநூல்களின் வாசிப்பை 'எங்கிருந்து தொடங்குவது?' மார்க்சியம் ஓர் உயிரற்ற, பொருளற்ற சூத்திரமல்ல; மாறாக, அது ஓர் உண்மை நிகழ்முறை எதார்த்த உண்மை. அத்தகைய மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள 'கற்பனாவாத சோஷலிஸமும் அறிவியல் சோஷலிஸமும், நூலில் தொடங்கி, படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளில் வாசிக்க வேண்டியவற்றை, வெறுமனே பெயர்ப்பட்டியலாகத் தராமல் எளிய சுருக்கமான விளக்கக் குறிப்புகளுடன் தந்திருக்கிறார் ஆசிரியர். 'அரசும்- புரட்சியும்' 'என்ன செய்ய வேண்டும், கிராமப்புற ஏழை மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்த (நூல்களின்) நதி மகாநதி, என்றும் வற்றாதது. இறங்கி நீராடப் படித்துறைதான் இக்கையேடு. 

வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம்





வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் (1917-2012) 
கா.அ.மணிக்குமார்
 'மார்க்ஸ் இல்லாதிருந்திருந்தால் வரலாற்றில் எனக்கொரு தனியார்வம் உண்டாகியிருக்காது' என்ற எரிக் ஹாப்ஸ்பாம் புரட்சியின் காலம், மூலதனத்தின் காலம், பேரரசின் காலம், தீவிரங்களின் காலம், தேசம் மற்றும் தேசியம், எப்படி இவ்வுலகை மாற்றுவது, ஆதிகால கலகக்காரர்கள் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். 95 வயதில், கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காலமாகும் வரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தவர். அதனாலேயே பதவி உயர்வுகளும், அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டவர். 'குழந்தைப் பருவம் முதல் அரசியலில் மூழ்கியிருந்ததால் நான் வாழ்நாள் கம்யூனிஸ்டானேன்.  அக்டோபர் புரட்சியின் கனவு இன்னும் என்னுள் இருக்கிறது. மானுட விடுதலை என்பது மாபெரும் விசயம் என நான் இன்றும் நினைக்கிறேன்' என்றெல்லாம் அவரே பதிவு செய்திருக்கிறார். புது இடதுசாரிகள் ஒரு மார்க்சிய முகமூடிக்குப் பின்னால் இருந்து கொண்டோ, அல்லது அரசியலற்றதும், அரசியலுக்கு எதிரானதுமான கலாச்சார கருத்து வேற்றுமை என்ற போர்வையிலோ அராஜகவாதிகளின் மறுபிறப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்" என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். சிறு நூல்  எனினும் மிக காத்திரமானது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய 
பேரா. கா. அ. மணிக்குமாரின் வரலாற்றுப் புலமை வெளிப்பட்டுத் தெரியும் நூல்.

காலனியம் - பிபன் சந்திரா



காலனியம் - பிபன் சந்திரா
 தமிழில் : அசோகன் முத்துசாமி.
 காலனியக் கட்டமைப்பின் நான்கு அடிப்படையான பண்புகளை பிபன் சந்திரா விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் வெளிப்பாடு இந்நூல். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதி வந்த மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில் மறைந்த தோழர் அசோகன் முத்துசாமியின் தெளிவான மொழிப் பெயர்ப்பில் வெளியாகியுள்ளது. 'காலனியம் உலக முதலாளித்துவ அமைப்பிற்குச் சேவகம் புரிவது; சமமற்ற பரிவர்த்தனை, சரக்கு உற்பத்தியைத் தனித்தனியாகப் பிரித்து அப்பகுதிகளை உலகச் சந்தையுடனும், காலனியாதிக்கப் பொருளாதாரத்துடனும் இணைப்பது; காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டுவது அல்லது எதேச்சதிகாரமாகத் தங்கள் நாட்டிற்கு மடைமாற்றுவது இக்கூறுகளைக் கொண்டது. உலக மயமாக்கல் சூழலில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள்தாம் இந்தியாவின் மிகப்பெரிய சமூக வர்க்கமாக ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம், அந்நிய சக்திகளுடன் கைகோர்ப்பதையோ அல்லது அந்நிய மூலதனத்திற்குத் தடையற்ற அனுமதி வழங்குவதையோ அல்லது பொருளாதாரத்தில் அரசின் பாத்திரத்தைப் பலவீனப்படுத்துவதையோ தடுப்பதில் இடதுசாரிகள் குறித்த அச்சம் ஒரு சக்திமிக்க காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேறொரு கோணத்தில் இடதுசாரிகளின் பலவீனங்களால் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ சக்திகள் தமது வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்கிற திசைவழிக்குத் திருப்பிவிட முடிந்துள்ளது என தர்க்கரீதியாக விவாதிக்கிற அரியநூல் இது. 'காலனியம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்திய காரணத்தையே  காட்டி இடதுசாரி அறிவு ஜீவிகள் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதான ஒரு தகவல், இங்கே தொடர்ந்து இடதுசாரி எதிர்ப்பு விஷங்கக்கிக் கொண்டிருக்கிற 'சுதந்திரமான' சிந்தனையாளர்களின் கவனத்திற்குச் சமர்ப்பணம்.