ஏ.ஆர். ரஹ்மான் ஏ.ஆர். ரஹ்மான் ஏ.ஆர். ரஹ்மான் இந்த பெயரை எங்கும் எதிரொலிக்கும் ஒரு நாளில் திலீப்குமார் என்கிற பெயர் முற்றிலும் மறக்கப்பட்டிருக்கும். தனது பிறப்பு சான்றிதழில் கூட அவர் தனது இயற்பெயரான திலீப்குமாரை மாற்றி பாஸ்ட்போர்ட்டிலிருந்து யாவற்றிலுமே ரஹ்மான் ஆகிவிட்டார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நாவலில் படத்தில் வரும் ஜமாலுக்கும் ரஹ்மானுக்கும் வாழ்க்கை ரீதியில் குழந்தை பருவ கால வித்தியாசம் ரொம்பக் கிடையாது என்பது பலருக்கு தெரியாது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேடு திலீப்குமார் என்றுதான் அவரை சுட்டுகிறது. ரொம்ப சுமார் படிப்பு... படிப்பில் ‘ஆர்வமின்மை’ காரணமாக வலுக்கட்டாய டி.சி.யை அவருக்கு அது வழங்கியது. அப்பா இல்லாத சிறுவன் பிறகு சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் இடம் கிடைத்து படித்ததும் அதே திலீப்குமார் பெயரோடுதான். பதினோராம் வகுப்போடு படிப்பு நிறுத்தி இசையே வாழ்வாகிப் போனபோது, குடும்ப வறுமை போக்குவதற்கு பெரும்பாலும் இசுலாமிய திருமண நிகழ்வுகளில் இசை வாய்ப்புக் கிடைக்க அவரை ஏ.ஆர். ரஹ்மான் ஆக்கியது. பள்ளி மாணவனான திலீப்குமார் ஒரு ‘சுமார் ரக மாணவர்’ இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலக இசை பேரறிஞர்! நமது பள்ளிக்கூட ‘கல்விமுறை’ பற்றி நமது பொறியில் அறையும் இன்னொரு முக்கிய அபாய எச்சரிக்கை. இது ஏ.ஆர். ரஹ்மானின் வெற்றி! திலீப்குமாரின் தோல்வி! வறுமையின் கொடிய பல்சக்கரங்களில் நசுங்கி வதைபட்டு வளரும் ஜமால் மாதிரி குழந்தைகள் இந்தியாவில் சராசரி ‘குடும்ப வாழ்வு’ குழந்தைகளை விட அதிகம் எனும் உண்மை சமீபத்திய FORCES (Forum for Creche and Child care services) அமைப்பின் புள்ளிவிவர வெளியீட்டில் ஒரு தீப்பிழம்பாக நம் இதயத்தை தகிக்கிறது. விளம்பரங்களில் கொழுகொழுவென வரும் குழந்தைகளை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மத்தியஅரசு தனது வருடாந்திர பட்ஜெட்டில் குழந்தை நலத்திட்டங்களுக்காக பெரிய அளவில் பணம் ஒதுக்குவதாக மார்தட்டுகிறது. யு.ஏ.பி. அரசாங்கம் என்ன செய்துள்ளது? 2003_04 பட்ஜெட்டில் மொத்த தொகையில் 2.20% குழந்தை நல உதவி திட்டங்களுக்கு ஒதுக்கியது. 2008_09 (சமீபத்திய) பட்ஜெட்டில் அதை 5.34% வரை உயர்த்தியுள்ளதாக அரசின் விளம்பரங்கள் மார்தட்டுகின்றன.ஆனால் அதே 1998_99க்கும் 2005_06க்கும் இடையேயான ஆண்டுகளில் இந்தியக் குழந்தைகளில் சத்து குறைபாடு காரணமாக உயிர்நீத்தக் குழந்தைகள் 15.5 சதத்திலிருந்து 19.1 சதமாக உயர்ந்துள்ளது என்பதே உண்மை. ஸ்லம்டாக் படத்தில் வருவதுபோல குழந்தைகளுக்கு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி குரோர்பதி வாய்ப்பை நல்க முடியுமானால் ஒரு ரொட்டியும் பருப்புமாவது உண்ணக் கிடைக்கலாம். கிராமப் புறங்களில் சராசரியாக நாளன்றுக்கு 2,400 கலோரி உணவு கிடைக்க முடியாமல் வாடும் நிலை. 1993_94ஆம் ஆண்டில் 75% ஆக இருந்தது. 2004_05ஆம் ஆண்டில் 87%மாக உயர்ந்து விட்டது. இது எத்தியோப்பியாவின் நிலையை விட 1% மட்டுமே குறைவு! அனீமியா எனப்படும் சத்துக்குறைவு சோகைநோய் பாதித்த வறுமை குழந்தைகள் எண்ணிக்கைக்கு மைய அரசு பணம் கூடுதலாய் ஒதுக்கியதாக மார்தட்டும் அதே காலகட்டத்தில் 74.2%லிருந்து 79.2%மாக கூடி விட்டது என்றால் அரசு ஒதுக்கும் நிதி என்ன ஆகிறது என்பது பற்றி ஆராய வேண்டி உள்ளது.சரி. ஸ்லம்டாக் நகரப் பகுதி ‘நோய்கள்’ பற்றியது அல்லவா. நாம் நகரங்களுக்கு வருவோம். இந்திய நகர்புறங்களில் சராசரி புரத அளவாக அரசே 2,100 கலோரி என்றுதான் வைத்திருக்கிறது. சராசரி நாளை வறுமையோடு பசியில் வதங்கியபடி கழிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதே ஆண்டுகளில் 57%லிருந்து 64.5%மாக உயர்ந்துள்ளது. எனவே குழந்தைகளை பட்டினிப் போடுவதில் சத்துகுறைவு ஏற்பட வைத்து கொன்றுபோடுவதில் நாம் வெகுவேகமாக ‘முன்னேறி வருகிறோம்’. பொருளாதார அறிஞர் அமெர்தியாசென் சமீபத்தில் குறிப்பிட்டதை போல... ‘இந்தியாவில் சராசரி எடையைவிட குறைவான உடல் எடை கொண்ட குழந்தைகள் 47% பேர். சகாரா_ஆப்பிரிக்காவில் கூட அப்படி இல்லை (அங்கே 29%)..........70% கிராமத்து குழந்தைகள் ஆரம்பகல்வி கூட இல்லாத அவலநிலையில் வாழ்கிறார்கள். இந்திய அரசாங்கமோ புள்ளிவிபரங்களை இட்டுக்கட்டுவதிலேயே தனது கெட்டிக்காரத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறது.உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் பேசப்படும் ஒரு காலகட்டத்தில் நமது கிராமப்புற குழந்தைகள் உலகமும் உணவும் தெரியாமல் வளர்கின்றனர் என்பதே உண்மையான அவலநிலை. ஜமாலைப் போல குற்றமும்_குருகுருப்பும் குருதியுமாக வளர்ந்து ஆளாக இடையில் வறுமைக்கோ, நோய்க்கோ, பலியாகாது முதுமை அடையும் ‘அதிர்ஷ்டம்’ என்பதே ஒரு மில்லியனர் ஆவதற்கு சமமானதுதான்.
இரா.நடராசன்